நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் மீதும், அவரது தந்தை ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் உட்பட அனைவரும் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் எனவும், தப்பியோடிய அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, நேற்று (01-05-24) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து, வெளிநாட்டில் தலைமறைவான பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் மீதமுள்ள மக்களவைத் தொகுதியில் மே 7ஆம் தேதி ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி, காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
அந்தப் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, “பிரஜ்வல் ரேவண்ணா 400 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். இது வெறும் பாலியல் குற்றச்சாட்டு அல்ல. கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள். ரேவண்ணா ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை செய்பவர் என்பதை பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் அறிந்திருந்தும், அவரை ஆதரித்து, ஜேடி(எஸ்) உடன் கூட்டணி அமைத்தனர். மேலும் பிரதமர், கர்நாடக மக்கள் முன்னிலையில், இந்தக் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஆதரவளித்து வாக்கு கோரினார். இந்தக் கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு நீங்கள் வாக்களித்தால் அது அவருக்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் ஒவ்வொரு பெண்ணையும் பிரதமர் அவமதித்துள்ளார். பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்து பா.ஜ.க தலைவர்களும் நாட்டின் ஒவ்வொரு பெண்ணிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகில் எந்த ஒரு தலைவரும் பாலியல் வன்கொடுமை செய்பவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டிருக்க மாட்டார்கள். ஒரு கூட்டு பாலியல் குற்றவாளிக்கு பிரதமர் வாக்களிக்கக் கோரினார் என்பது உலகம் முழுவதும் செய்தியாக உள்ளது. இது பா.ஜ.கவின் சித்தாந்தம். அவர்கள் கூட்டணி அமைத்து ஆட்சிக்காக எதையும் செய்யத் தயாராக உள்ளனர்” என்று கூறினார்.