
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் உதவி ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கணினி வழித் தேர்வுக்கு, முதற்கட்ட கட்ட கணினி வழித் தேர்வில் தமிழகத்தில் இருந்து சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர். இத்தேர்வர்களுக்கு 2ஆம் கட்ட கணினி வழித் தேர்வு இன்று (19.03.2025) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் பெரும்பாலான தேர்வர்களுக்கு, தேர்வு மையங்கள் தமிழகத்திற்கு வெளியே தெலங்கானா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை கடந்து தெலுங்கானா வரை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இத்தகைய சூழலில் தான் மதுரை நாடாளுமன்றத் தொகுதியைச் சார்ந்த பல தேர்வர்களின் பெற்றோர் சு. வெங்கடேசன் எம்.பி.யை அணுகி தேர்வு மையங்களைத் தமிழகத்திற்குள் மாற்றித் தருவதற்குத் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தேர்வு மையங்களை மாற்றுவதற்கு உடனடியாக தலையிடுமாறு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். இத்தகைய சூழலில் தான் ஒரே அமர்வில் (shift) எல்லா தேர்வர்களுக்கும் தேர்வு நடத்த வேண்டியிருப்பதால் தேர்வு மையங்களை மாற்ற முடியாது என ரயில்வே தேர்வு வாரிய தலைவர் பிரதீபா பதில் அளித்திருந்தார்.
இருப்பினும் கடும் சிரமங்களுக்கு இடையே தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள் சுமார் ஆயிரம் கி.மீ. தொலைவைக் கடந்து தேர்வர்கள் ஹைதராபாத், செகந்திராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குத் தேர்வு எழுதச் சென்றிருந்தனர். இந்நிலையில் 2ஆம் கட்ட கணினித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் தேர்வர்கள் மத்தியில் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெற உள்ள தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டுள்ள தகவலைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எவ்வித உரிய முன்னறிவிப்பும் இன்றி கடைசி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழக இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் வீண் அலைச்சல் தவிர்க்கப்பட்டிருக்கும் எனத் தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.