மத்தியப் பிரதேசத்தில் வரும் 28ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று விதிஷா பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியது:
”ஊழல், விவசாயிகள் மற்றும் வேலை வாய்ப்பின்மை பிரச்சனை குறித்து மோடி ஒரு காலத்தில் பேசினார். ஆனால், அந்த பிரச்சனைகள் பற்றி அவர் தற்போது எதுவும் பேசுவதில்லை. அவரது பேச்சில் எதுவும் இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அவருடைய வாக்குறுதிகள் எல்லாம் பொய்யானவை. 2014ம் ஆண்டுக்கு முன் பல விஷயங்களுக்காக மோடி வாக்குறுதிகள் அளித்தார். ஏன் அவைகள் இன்றும் நிறைவேற்றப்படவில்லை. மத்தியப் பிரதேசத்தில் அடுத்த ஆட்சியை காங்கிரஸ் அமைக்கும்போது, முதல்வர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் பணியாற்றுவார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னை அதிகளவில் உள்ளன. சீனாவில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் சூழ்நிலையில், இந்தியாவில் ஒரு நாளைக்கு 450 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது என நாடாளுமன்றத்தில் அரசே தகவல் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாளில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும். மத்தியப் பிரதேசத்தை வேளாண் மையமாக மாற்றுவோம்” என்றார்.