கடந்த இரண்டு மாதங்களாக இந்திய எல்லைப்பகுதியில் சீனாவுடன் நடைபெறும் எல்லைப் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி வாய்திறக்காதது வியப்பாக உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு, பொருளாதாரச் சரிவு, சீனா உடனான எல்லைப்பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. மூன்று நாள் சுற்றுப்பயணமாகக் கடந்த திங்கள்கிழமை அன்று தனது வயநாடு தொகுதிக்குச் சென்ற ராகுல் காந்தி, நேற்று கண்ணூரிலிருந்து டெல்லி புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "கடந்த இரு மாதங்களாகப் பிரமதர் மோடியிடமிருந்து சீனா எனும் வார்த்தையை மக்கள் கேட்டிருக்கிறார்களா. ஏன் பிரதமர் மோடி சீனா எனும் வார்த்தையை உச்சரிக்கவில்லை என்று சிந்தியுங்கள். உண்மையின் பக்கம் மக்களைத் திசை திருப்பிவிடக் கூடாது என்பதால்தான் சீனா பற்றி பிரதமர் மோடி பேசவில்லை. இந்தியாவின் நிலப்பகுதியைச் சீனா ஆக்கிரமித்துள்ளதுதான் உண்மை. நம்முடைய நிலப்பகுதியிலிருந்து எப்போது சீன ராணுவத்தை விரட்ட மோடி திட்டமிட்டுள்ளார். ஆனால், இதுபற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பாரத மாதாவின் நிலப்பகுதி குறித்து பிரதமர் ஒருவார்த்தைகூட பேசாதது வியப்பாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.