புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக்கோரி உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என இவர்கள் பல்வேறு போராட்டங்களை ஏற்கனவே முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து கைது செய்ய முற்பட்டனர். இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து சில ஊழியர்கள் உப்பளம் பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறையின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.