பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் கரோனா நிலைமை குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி காணொளிக்காட்சி வாயிலாக இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் கலந்துகொண்டன. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நமது விஞ்ஞானிகள் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் வெற்றி பெறுவதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். மலிவான மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை உலகம் எதிர்பார்க்கிறது. அதனால்தான் உலகம் இந்தியாவை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
அடுத்த சில வாரங்களில் கோவிட் தடுப்பூசி தயாராக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் இதனை உறுதி செய்தவுடன், இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கும். சுகாதார தொழிலாளர்கள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட முதியோருக்குத் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தடுப்பூசி விநியோகத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் குழுக்கள் இணைந்து செயல்படுகின்றன. தடுப்பூசி விநியோகத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு நிபுணத்துவம் மற்றும் திறன் அதிகம் உள்ளது. தடுப்பூசி துறையில் நமக்கு மிகப்பெரிய, அனுபவம் வாய்ந்த கட்டமைப்பு உள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.