இந்தியாவில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் மூன்றாவது கரோனா அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 379 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் 1892 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒமிக்ரானால் இந்த அலை ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் கரோனா பணிக்குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் வேகமாக அதிகரித்து வருகிறது. பெரிய மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவின் மூன்றாவது அலையில் இந்தியா உள்ளது. முழு அலையும் ஒமிக்ரானால் ஊந்தப்படுவதுபோல் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.