சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளில் பெரும்பாலானோர் கல்வி அறிவு அற்றவர்களாக இருப்பதால்தான், அன்றாட தேவைகளுக்காக பிறரிடம் கையேந்தும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் சமீப காலமாக இந்நிலை சற்று மாறி திருநங்கைகள் அரசு பணிகளில் சேரத்தொடங்கியுள்ளனர். இவ்வாறு அவர்களின் வாழ்வாதாரம் மாற வேண்டும் என்றால் கல்வி அறிவு பெருவது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்த அனைத்து இந்திய திருநங்கைகள் கல்விச் சேவை அறக்கட்டளை அமைப்பு, திருநங்கைகளுக்கென்று தனி பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்கான பணிகள் உத்தர பிரதேசம் மாநிலத்தில் பசில் நகர் பகுதியில் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இங்கு திருநங்கைகள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலை படிப்பு வரை படிக்கலாம். இது தவிர அவர்கள் ஆராய்ச்சி படிப்பும் படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஜனவரி மாதத்தில் முதலாம் வகுப்பு தொடங்கும் என்றும், இதர பிரிவுகளுக்கு மார்ச் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.