மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்காக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில் காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட உள்ள தொழில்துறை சீர்திருத்தங்கள் குறித்து பேசுகையில், "தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிகமான முன்னுரிமை அளிக்கப்படும். புதிதாகத் தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு நிதியுதவியும், வங்கியில் எளிதாகக் கடன் வசதியும், வரிச்சலுகையும் அளிக்கப்படும். மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி கிடைத்த அடுத்த 3 ஆண்டுகளுக்கு அரசிடம் இருந்து வேறு எதற்கும் தனித்தனியாக அனுமதி பெற வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் இளைஞர்கள் எளிதாகத் தொழில் செய்யலாம். எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தொழில் தொடங்கிவிட்டால், நிம்மதியாகத் தொழிலை மட்டும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு கவனிக்கலாம். அதிகாரிகளால் வரும் கெடுபிடிகள், தொந்தரவுகள், கையூட்டு என எந்தவிதமான தடையையும், தாமதங்களையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சந்திக்காது" என கூறினார்.