காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்டமான பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார் ராகுல் காந்தி. இந்த நடைப்பயணம், மார்ச் 20 வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது.
பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கம் வந்த ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு மேற்கொண்ட யாத்திரையின் போது, நாய் சாப்பிட மறுத்த பிஸ்கெட்டை தனது ஆதரவாளருக்கு ராகுல் காந்தி கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாகி உள்ளது.
அந்த வீடியோவில், ‘ராகுல் காந்தி தனது திறந்தவெளி வாகனத்தில் வளர்ப்பு நாய் ஒன்றுடன் அமர்ந்திருக்கிறார். அப்போது, அந்த நாய்க்கு பிஸ்கெட் கொடுப்பதற்காக அருகில் உதவியாளரிடம் பிஸ்கெட் பாக்கெட்டை கேட்கிறார். அதன்படி, அந்த நாய்க்கு பிஸ்கெட் ஊட்டியபடி தனது ஆதரவாளர்களுடன் பேசுகிறார். அப்போது, நாய் பிஸ்கெட் ஒன்றை சாப்பிட மறுக்க, அதனை உடனடியாக ராகுல் காந்தி தனது ஆதரவாளருக்கு கொடுக்கிறார்’. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. மேலும் பா.ஜ.க.வினர் பலரும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ராகுல் காந்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தாலும் அந்த பிஸ்கெட்டை என்னை சாப்பிட வைக்க முடியவில்லை. நான் பெருமைமிக்க அசாமி மற்றும் இந்தியன். நான் அதை சாப்பிட மறுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.