Skip to main content

உலக அரங்கில் இந்தியாவின் புகழை கெடுத்துவிட்டாரா ராகுல்? - வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

rahul gandhi cambridge speech

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவினை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு நாட்டு மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். இந்த ஒற்றுமை பயணத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்ததாக அக்கட்சியினர் தெரிவித்தனர். 

 

இந்த நிலையில் தனது ஒற்றுமை பயணத்தை முடித்த ராகுல் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குச் சென்று கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் ராகுல் கலந்துகொண்டு வருகிறார். அப்படி லண்டனில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. அதேசமயம் விலைவாசியும் உயர்ந்துள்ளது. ஒன்று அல்லது இரண்டு பேர்தான் இந்தியாவின் மொத்த பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள். அதனால் மக்கள் தங்களது பொருளாதாரத்தை இழந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா போன்ற ஜனநாயக நடுகளின் உற்பத்தி சரிந்து, சீனாவிற்கு இடம்பெயர்ந்துள்ளது” என்று பல கருத்துகளை முன்வைத்தார். இதற்கு உலக அரங்கில் ராகுல் காந்தி இந்தியாவின் புகழை கெடுத்துவிட்டதாக பாஜகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

 

இது தொடர்பாக பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் ரிஜிஜு, ராகுல்காந்தியின் பெயரை குறிப்பிடாமல், “சிலர் சர்வதேச அரங்கில் இந்தியாவின் புகழை கெடுக்கும் நோக்கில் நாட்டின் ஜனநாயகம் குறித்த வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் இந்த முயற்சி ஒரு போதும், வெற்றி பெறாது. உலகின் மிக பழமையான ஜனநாயக நாடாக அமெரிக்கா இருக்கலாம். ஆனால் இந்தியாதான் ஜனநாயகத்தின் தாய் நாடு. நீதிமன்றங்கள் எதிர்க்கட்சிகள் போன்று செயல்படவேண்டும் என்று நினைக்கிறார்கள். அரசுக்கு எதிராகவும், தங்களுக்கு சாதகமாகவும் தீர்ப்புகள் வரவேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் அப்படி நடப்பதில்லை என்பதால் சிலர் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு எதிராக தவறான பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

 

இதற்கு விளக்கமளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “ராகுல் காந்தி, சீனாவில் இருப்பதைப் போல மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவன அமைப்புக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளையும், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளின் உற்பத்தி வழிமுறைகளை அதிகப்படுத்துவதற்கான அழுத்தமான தேவையையும் தெளிவாக வரையறுத்துள்ளார். அந்த பேச்சின் நுணுக்கங்கள் பாஜகவிற்கு புரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.   இதனிடையே ராகுலின் பேச்சுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்