இந்தியப் பொருளாதாரம் முதன்முறையாக மந்தநிலையை அடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல், நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது மத்திய அரசு. இதனால் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், சிறு, குறுந்தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, 2020 - 2021 நிதியாண்டில், முதல் இரண்டு காலாண்டுகளிலும் இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியா பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. மேலும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8.6 சதவீதம் சரியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு நிதியாண்டு முழுவதும் மைனஸ் 9.5 சதவீதம் என்ற அளவிலேயே இந்தியப் பொருளாதாரம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பொருளாதார மந்தநிலைக்குச் செல்கிறது. பிரதமர் மோடியின் செயல்கள், கொள்கைகளால், இந்தியாவின் வலிமையைப் பலவீனமாக மாற்றிவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.