மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த சூழலில், இம்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஆறு நாட்களாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்தப் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "உணவு உற்பத்தியாளர்கள் போராட்டக் களங்களிலும் சாலைகளிலும் அமர்ந்து போராடி வருகிறார்கள். தொலைக்காட்சிகளிலும் பேசி வருகிறார்கள். விவசாயிகளின் கடின உழைப்புக்கு நாம் அனைவரும் கடன்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் மட்டுமே, இந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படும். இந்தக் கடன், அவர்களுக்கு நீதி மற்றும் அவர்களின் உரிமைகளை வழங்குவதன் மூலம் மட்டுமே நிறைவடையும். அவர்களை மோசமாக நடத்துவதன் மூலமோ அல்லது தடியடிப் பிரயோகத்தின் மூலமோ அல்லது அவர்களுக்கு எதிராகக் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவதன் மூலமோ நிறைவடையாது. விழித்துக் கொள்ளுங்கள், ஆணவத்தின் நாற்காலியில் இருந்து இறங்கி வாருங்கள். விவசாயிகளுக்கு அவர்களுக்கான உரிமைகளை வழங்குவது குறித்துச் சிந்தியுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.