கரோனா வைரஸுக்கு எதிரான போரில் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த இரு வாரங்களாக கரோனா வைரஸின் பாதிப்பு மிக அதிகளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஐந்து லட்சத்திற்கு அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த பத்து நாட்களில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தப் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி மத்திய அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, "நாட்டின் பல்வேறு புதிய பகுதிகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா வைரஸைத் தோற்கடிக்க இந்திய அரசிடம் எந்தவிதமான திட்டமும் இல்லை. பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார். கரோனா வைரஸுடன் போரிட மறுத்து, அதனிடம் மோடி சரணடைந்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.