Skip to main content

என்.சி.சி. மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கிய வீடியோ! - விளக்கம் தந்த கல்லூரி முதல்வர் 

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

Maharashtra NCC Student viral video

 

தனியார் கல்லூரியில் படிக்கும் என்.சி.சி மாணவர்களை சீனியர் மாணவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

 

மஹாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியில் ஜோஷி பெதேகர் எனும் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் கீழ் உறுப்பு கல்லூரிகளாக பந்தோகர் கல்லூரியும், வி.பி.எம். கல்லூரியும் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு என்.சி.சி வகுப்பு பயிற்சி ஜோஷி பெதேகர் கல்லூரி வணிகவியல் வளாகத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்த நிலையில், என்.சி.சி. பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் தவறு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால், என்.சி.சி பயிற்சியாளரான அந்த கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர் ஒருவர், தவறு செய்த மாணவர்களுக்கு கொடுமையான மனிதாபிமானம் அற்ற வகையில் தண்டனை கொடுத்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. 

 

அந்த வீடியோவில், தவறு செய்ததாகச் சொல்லப்படும் அந்த மாணவர்களைக் கொட்டும் மழையில், கால் நுனியையும் தலை முன் பகுதியும் தரையில் படுமாறு சேற்றில் குனிய வைத்து, அவர்களது இரு கைகளையும் பின்னால் கட்ட வைத்துள்ளார். அதன் பின்பு, ஒரு பெரிய மூங்கில் கட்டையைக் கொண்டு மாணவர்களின் பின்புறத்தில் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குகிறார். சீனியர் மாணவரின் இந்தக் கொடூரமான செயலுக்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஜோஷி பெதேகர் கல்லூரி முதல்வர் சுசித்ரா நாயக், “அந்த வீடியோவில் தாக்கிய மாணவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் எங்கள் உறுப்பு கல்லூரியான பந்தோகர் கல்லூரியில் அறிவியல் வகுப்பில் படிக்கும் மாணவர். அதனைத் தொடர்ந்து அந்த மாணவர் உடனடியாக கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது அந்த காட்சியை வீடியோ எடுத்தவர்களோ எங்களை அணுகியிருந்தால் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்