பிரான்ஸின் 'டசால்ட்' நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் உட்ப்பட பல எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவந்தன. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மூன்று பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் வழக்கறிஞர் வினீத் தண்டா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், காங்கிரஸ் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலை விவரமும், பாஜக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை விவரமும் மற்றும் அதன் தொடர்பான ஒப்பந்த விவரம் ஆகியவற்றை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம் அந்த விவரங்களை மூன்று சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான இறுதி செய்யப்பட்ட நடைமுறை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மூன்று சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு வரும் 29-ஆம் தேதி விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.