Skip to main content

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை நான் ஆதரிக்கவில்லை! - ரகுராம்ராஜன்

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை நான் ஆதரிக்கவில்லை! - ரகுராம்ராஜன் 

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை நான் ஆதரிக்கவே இல்லை என மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.



கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு செல்லாதென அறிவித்தார். இது நாடு முழுவதும் இன்றுவரை பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இதுகுறித்த அறிக்கையையும் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இதுகுறித்து ஆங்கில ஊடகமொன்றில் கலந்துகொண்டு மனம்திறந்தார். அப்போது, பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கலாம் எனவும் மத்திய அரசிடம் பரிந்துரை செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் கிடைக்கும் நீண்ட கால பலன்களைத் தந்தாலும், அது குறுகிய கால இழப்பீடுகளால் முறியடிக்கப்படும். 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பு இழப்பு நடவடிக்கை குறித்து என்னிடம் கருத்து கேட்டது. நான் என் தரப்பு கருத்துக்களை வாய்மொழியாக சொன்னேன். பின்னர், ரிசர்வ் வங்கி துணை ஆளுநரின் தலைமையில் இதற்கான ஆலோசனைக் குழுவையும் மத்திய அரசு அமைத்தது. மத்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் உர்ஜித் சிங், மக்களோடு ஒன்றிணையும் கால அவகாசம் தேவைப்படும். எனவே, நான் அதையடுத்து பொதுவெளிகளில் பேசுவதைத் தவிர்த்து வந்தேன்’ என கூறியுள்ளார்.

தற்போது அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நிதித்துறை பிரிவில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றி வரும் ரகுராம் ராஜன், ‘ஐ டூ வாட் ஐ டூ’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதிலும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை குறித்த தனது பார்வையை அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்