நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் நான்கு கட்டமாக 381 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக வாக்குப்பதிவு நேற்று (20-05-24) மாலை நடந்து முடிந்தது.
இதற்கிடையில், ஒடிசாவில் இன்று (20-05-24) பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ஒடிசாவில் ஒரு மாஃபியா எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது. மேலும், யாரையும் போட்டியிட அனுமதிக்கவில்லை. ஜூன் 10ஆம் தேதி பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், அதன் முதுகெலும்பு உடைந்து விடும். நமது வீடுகளின் சாவிகள் தொலைந்து போனால், ஜெகநாதரைப் பிரார்த்தனை செய்து, இறைவனின் ஆசீர்வாதத்துடன் ஓரிரு மணி நேரத்தில் அவற்றைக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால் பகவான் ஜகன்னாத ரத்ன பண்டரின் சாவிகள் காணாமல் போய் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. ரத்ன பண்டரின் சாவி காணாமல் போனது தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கை, சாவிகள் தமிழகத்திற்கு சென்று விட்டதால், ஆறு ஆண்டுகளாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது” எனப் பேசினார்.
பொதுக்கூட்டத்திற்கு பங்கேற்பதற்கு முன்பாக, பிரதமர் மோடி ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அதனையொட்டி, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், “பூரியில் உள்ள மஹாபிரபு ஜகந்நாதரிடம் பிரார்த்தனை செய்தேன். அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருந்துகொண்டு முன்னேற்றத்தின் புதிய உயரங்களுக்கு நம்மை வழிநடத்தட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஒடிசாவில் உள்ள பூரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரான சம்பித் பத்ரா அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடி பக்தர்” என்று கூறினார். பா.ஜ.க வேட்பாளர் கடவுள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. மேலும், அவருக்கு எதிராக எதிர்கட்சிகள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “பிரதமர் தன்னை ஒரு பேரரசராகக் கருதத் தொடங்கும் போது, அரசு சபையினர் அவரைக் கடவுளாகக் கருதத் தொடங்கும் போது, பாவத்தின் அழிவு நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது. கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் உரிமையை பா.ஜ.கவினருக்கு வழங்கியது யார்? இந்த ஈகோ தான் அவர்களின் அழிவுக்கு காரணமாகிறது” என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் சம்பித் பத்ரா மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், “இன்று நான் கூறிய ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பூரியில் ரோட்ஷோவுக்குப் பிறகு, பல மீடியா சேனல்களுக்கு பேட்டி கொடுத்தேன். எல்லா இடங்களிலும் ஒரே விஷயத்தைச் சொன்னேன், பிரதமர் நரேந்திர மோடி மகாபிரபு ஜெகநாதரின் தீவிர பக்தர் என்று. கடைசியில், மற்றொரு சேனல் எனது பேட்டியை எடுத்தபோது, அங்கு மிகவும் வெப்பம், நெரிசல் மற்றும் சத்தம். அதனால், மகாபிரபு பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர் என்று எதிர்மாறாகச் சொன்னேன். இது ஒருபோதும் உண்மையாக இருக்க முடியாது. மேலும் கடவுள் ஒரு மனிதனின் பக்தன் என்று ஒரு நபர் தனது உணர்வுகளில் ஒருபோதும் சொல்ல முடியாது. இந்தத் தவறை நான் அறியாமல் செய்துவிட்டேன். சிலருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் அறியாமல் செய்யும் தவறுகளை கடவுள் கூட மன்னிப்பார். இந்த நாக்கு சறுக்கலுக்கு நான் மகாபிரபு ஜெகநாதரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.