Skip to main content

ஜாகிர் உசேன் கொலை வழக்கு; துப்பாக்கிச்சூடு நடத்தி குற்றவாளியை பிடித்த போலீசார்!

Published on 19/03/2025 | Edited on 19/03/2025

 

Zakir Hussain case Police arrest culprit

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்சி மண்டபம் அருகே நேற்று (18.03.2025) காலை 5:30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை மர்ம நபர்கள் வெட்டி கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றனர். இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில் படுகொலை செய்யப்பட்ட நபர் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பதும், காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தவர் என்பதும் தெரியவந்தது.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் வக்பு வாரியத்திற்கு சொந்தமான 32 சென்ட் நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதும் தெரியவந்தது. மேலும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஜாகிர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ரம்ஜான் நோன்புக்காக நேற்று வீட்டில் இருந்து கிளம்பி பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை முடித்துவிட்டு சென்றபோது மர்ம கும்பல் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. ஓய்வுபெற்ற முன்னாள் காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜில் படுகொலை செய்யப்பட்டுள்ளது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அக்பர்ஷா, கார்த்திக் என்ற இருவர் திருநெல்வேலி மாவட்ட நான்காவது நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். முன்னதாக ஜாகீர் உசேன் வெளியிட்டிருந்த வீடியோவில் நிலப் பிரச்சனையில் போலீஸ் ஒருவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து திருநெல்வேலி  டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதோடு காவல் உதவி ஆணையராக பணியாற்றிய செந்தில்குமார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை ஆணையர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவிட்டிருந்தார்.

Zakir Hussain case Police arrest culprit

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முகமது டௌபிக் என்ற கிருஷ்ணமூர்த்தி என்பவரை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்துள்ளனர். திருநெல்வேலியில் உள்ள ரெட்டியார்பட்டியில் உள்ள மலைப்பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணமூர்த்தியை, போலீசார் பிடிக்க முயன்றபோது அவர் போலீசாரை தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கிருஷ்ணமூர்த்தியைத் துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பிடித்துள்ளனர். இதில் காயமடைந்த காவலர் ஒருவரும், காலில் காயமடைந்த குற்றவாளி கிருஷ்ணமூர்த்தியும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்