Skip to main content

“இந்திய நாட்டிற்கு சோசலிசமே மாற்று” - கே.பாலகிருஷ்ணன்

Published on 19/03/2025 | Edited on 19/03/2025

 

Socialism is the only alternative for India says K. Balakrishnan

மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ஏப்ரல் 2-ந்தேதி தொடங்கி 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி கடலூரில் ‘சோசலிசமே மாற்று’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. 

கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், “தமிழ் மொழிக்காக யார் யாரோ உரிமை கொண்டாடுகிறார்கள். யார் யாரோ பேசுகிறார்கள். தமிழ்நாடு மாநிலம் அமைய வேண்டும் என்பதற்காக களம் கண்டிருக்கிற இயக்கம் என்று சொன்னால் செங்கொடி இயக்கம் தான். கம்யூனிஸ்ட் இயக்கம் அன்று போராடாமல் இருந்திருந்தால், மொழி அடிப்படையிலான மாநிலமே அமைந்திருக்காது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு என்று அறிவிக்கப்பட்டது என்று சொன்னால், அதற்காக போராடியது மட்டுமல்ல காவல்துறையின் அடக்குமுறை மீறி சிறை சென்றவர்கள் செங்கொடி இயக்கத்தினர்.

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக  பி.ராமமூர்த்தி தான் சட்டமன்ற வரலாற்றில் முதன் முதலில் தமிழில் பேசினார். 52 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை திமுக புறக்கணித்து விட்டது. அந்த காலத்தில் தமிழுக்காக, தாய் மொழிக்காக, தாய்மொழி தான் தமிழகத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதற்கு எண்ணற்ற வாதங்களை எடுத்து வைத்து வாதாடிய தோழர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவா என்பதை நினைவு கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்டுகளை விட பண்பாட்டுக்காக களத்தில் நின்று போராடியவர்கள் தமிழகத்தில் வேறு யாரும் கிடையாது, மொழி உரிமைக்காக போராடியவர்களும் வேறு யாரும் கிடையாது. ஆனால் ஆட்சி மொழியாக இல்லை, அரசு மொழியாக இல்லை, பயிற்று மொழியாக இல்லை, நீதிமன்றம் மொழியாக இல்லை.மேடையில் பேசுகின்ற மொழியாக, சங்க இலக்கியங்கள் பாடுகின்ற மொழியாக மட்டுமே இருந்தால் தமிழ் வாழாது.

இந்தி திணிப்பு இருக்கின்ற அதே நேரத்தில் அந்த இடத்தில் தமிழை வைக்க வேண்டுமே தவிரத் தமிழுக்கு மாற்றாக ஆங்கிலத்தை வைக்கின்ற அநீதி தமிழ்நாட்டில் நடந்து விட்டதே, என்பதை நினைத்து பார்க்க வேண்டும். இன்று இரு மொழிக் கொள்கை இருக்கிறது. ஆனால் தாய் மொழி தான் ஒரு மனிதனின் சிந்தனைக்கு அடிப்படை. சோசலிசம் என்ன செய்யும், சோசலிச சமூகம் என்ன அளிக்கும்? சோசலிசத்தின் சாதனைகள் என்ன?. என்பதை புரிந்து கொண்டால்தான்,  சோசலிசம் மாற்று ஏன் என்பதை தெரிந்துகொள்ள முடியும். 1917 ஆம் ஆண்டு சோவியத் நாட்டில் ஜார் மன்னனைத் தூக்கி எறிந்து செங்கொடியின் கீழ் சோசலிஸ்ட் அரசு நிறுவப்பட்டது. ஆளும் வர்க்கங்களுக்குள் ஆட்சி மாறி இருக்கும், ஆனால் உலகத்தில் முதல் முறையாக ஆளும் வர்க்கத்தைத் தூக்கி எறிந்து தொழிலாளி வர்க்கம் ஆட்சியை நிறுவியது. இந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு சோவியத் நாடு பின்னடைவை சந்தித்தது.

நேரு பிறதரமாக இருந்த போது இந்தியா தொழில் வளம் மிக்க நாடாக மாற வேண்டும் என்று சொன்னார். பிரிட்டிஷ் அரசும், அமெரிக்க அரசும் இந்தியாவிற்கு எந்த வகையிலும் உதவி செய்ய முன்வரவில்லை. இந்த நிலையில் தான் நேரு சோவித் ரஷ்யாவின் உதவியை கோரினார். சோவியத் ரஷ்யா முடிவெடுத்து. இந்திய நாட்டின் தொழில் வளத்தை பெருக்க உதவி செய்ய முன் வந்தது. நெய்வேலி என்எல்சி நிறுவனம் இயங்குகிறது என்று சொன்னால் சோவியத் நாட்டின் உதவி இல்லாவிட்டால் நெய்வேலி வந்திருக்காது.

ரூட்கோளாவில் அமைந்துள்ள எக்கு தொழிற்சாலை, பிலாயில் அமைந்துள்ள எக்கு தொழிற்சாலை, பக்ராயணங்களில் அமைந்துள்ள அணைக்கட்டு, புனல் மின்சாரம் இந்த மகத்தான தொழிற்சாலைகள் எல்லாம் சோவியத்து நாடு உதவி செய்தது மட்டுமல்ல, இதற்காக ஒரு ரூபாய் கூட நிதியை இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறாமல் சொந்த நிதியில் ஒதுக்கீடு செய்து கொடுத்தனர். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனியில் இருந்து இதுபோன்ற உதவிகள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது என்று கூற முடியுமா? ஏகாதிபத்திய நாட்டிற்கும் சோவித்து நாட்டிற்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சோவியத் இழப்பு சோவியத் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு இல்லை. மூன்றாம் உலக நாடுகள் அனைத்திற்கும் இழப்பு. சோசலிச சமூகம் தான் மனிதனை வாழ வைக்கின்ற சமூகமாக இருந்திருக்கிறது.

தந்தை பெரியார் சோவித் நாட்டிற்குச் சென்றபோது அனைவரும் சமமாக இருக்கின்றார்கள் என்று ஆச்சரியமாக பார்த்தார்.  ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சென்ற பெரியார் ஒரு மாணவனை பார்த்து கணக்கு தெரியுமா என்று சோதிப்பதற்கு ஒரு கணக்கு கேட்கிறார். பத்து ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கி 20 ரூபாய்க்கு விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவன் சொன்னானாம் இரண்டு மாதம் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று. அந்த அளவுக்கு சோசலிசம் அந்த மாணவனுக்கு புரிந்துள்ளது. 160 கோடி மக்களை கொண்டு இருக்கும் சீனா நாடு 1949 இல் விடுதலை அடைந்தது. சீன புரட்சி நடந்து செங்கொடி ஆட்சி ஏற்பட்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியமே மண்டியிடக்கூடிய அளவிற்கு சீனா கம்பீரமாக உயர்ந்துள்ளது. என்றைக்காவது அந்நிய நாடுகளிடம் சீனா கையேந்தியுள்ளதா? தொழில்நுட்பம் என்று சொன்னால், ஏஐ என்கின்ற தொழில்நுட்பத்தை அமெரிக்கா வெளியிட்டால் அதைவிட சக்தி வாய்ந்த டீப்சி என்ற தொழில்நுட்பத்தை 2 மணி நேரத்தில் தயாரித்து வெளியிடுகிறது சீனா. அமெரிக்காவை  நேருக்கு நேர் சந்திக்கிற பொருளாதார வல்லமை சீனாவிடம் உள்ளது. பட்டினி, பசி, மக்கள் பரிதவிக்காத ஆட்சி ஒன்று உண்டு என்று சொன்னால். அது சோசலிச ஆட்சி தான். அமெரிக்கா அரசாங்கம் கடைப்பிடித்த நவீன தாராளமய கொள்கை இன்று தவிடு பொடி ஆகிவிட்டது.

சோவித் நாடுகளிலே மாக்ஸிமும் - லெனினியமும் தான் ஜாதிய மதப் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை சொன்னது. இந்தியாவில் ஜாதிய பிரச்சனை, மத பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. அப்படிப்பட்ட சோசலிசம் இந்தியாவில் அமையும்போது தான் இன்றைக்கு இருக்கும் நெருக்கடி தீரும். இன்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் உலகம் முழுவதும் சோசலிச கொடு தான் பறக்கும். இது சமூக விஞ்ஞானம்.

இந்திய நாட்டில் ஆர்எஸ்.எஸை பயன்படுத்தி மத மோதலை உருவாக்கி உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பது தான் பொது சிவில் சட்டம், வக் போர்டு சட்டம் கொண்டு வந்துள்ளனர். இந்தியா முழுவதும் இருக்கிற சிறுபான்மை மக்களை குறிவைத்து தாக்கி மதவெறி மாநிலமாக நாட்டை பிரயோகப்படுத்துவது. இந்து மதத்திற்காக அல்ல, இந்து மதத்தின் மீது, கடவுள் மீது கொண்டுள்ள பாசத்தினாலோ பக்தினாலோ அல்ல. இந்தியாவில் உள்ள உழைப்பாளி மக்கள் ஒன்று திரண்டுவிடக் கூடாது என்பதனால் தான் இந்த காரியத்தை பாஜக செய்கிறது. 

தமிழ்நாட்டில் பெரியார் போராடி பார்த்தார், தீண்டாமை தீரவில்லை. அம்பேத்கர் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தார்,  தீண்டாமை தீரவில்லை; தமிழ்நாட்டில் சாதி வெறியை எதிர்த்து பல களம் கண்டுள்ளோம். சொத்துரிமை பொதுவாக மாற்றப்படும் போது தான் எல்லார்க்கும் எல்லாம் என்று சொல்லும் நிலை உருவாகும் போது தான், சாதிய முகம் இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும்.

கடலூர் மாவட்டத்தில் 87 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான  பட்டியலின மக்களின் குடிசைகள் தீ வைத்து எரித்தனர். அரசியல்வாதிகள் உள்ளே வரக்கூடாது என்று போர்டு எழுதி போட்டார்கள். அன்றைக்கு என்ன நடந்தாலும் இறக்கப்படாத கொடி செங்கொடி ஆகத்தான் இருந்தது. சோசலிசத்தை பொதுவாக பேசுவது ஒன்று, அதை அடைவதற்கான வழி இன்னொன்று. அதை அடைவதற்கான வழியை மார்க்சிஸ்டர்களான நாம் இட்டுச் செல்ல வேண்டும்.  அந்த வழியில் இந்திய நாட்டு மக்களை திரட்டி மகத்தான கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

சார்ந்த செய்திகள்