
சென்னை தாம்பரம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சென்ற குமார் என்பவர் மாயமானார். இவர் திமுக முன்னாள் எம்.பி. ஒருவருக்கு உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் மாயமானது தொடர்பாக அவரது உறவினர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் குமார் கடத்தப்பட்டது தெரியவந்தது. அதோடு குமாரைக் கடைசியாக தொலைப்பேசியில் தொடபு கொண்டவர் தான் கடத்தியிருக்க வேண்டும் என போலீசார் உறுதி செய்தனர். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் குமாரைக் கடத்தி கொலைப்ப்பட்டதாக கைது செய்யப்பட்ட நபர் ஒப்புக்கொண்டார். அதோடு இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள மேல ஒலக்கூரில் குமாரைக் கொன்று புதைத்ததாகத் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குக் குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் சென்று குமார் உடலைத் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தினர். உடன் வருவாய்த்துறையினர் அருகில் இருந்தனர். அதன் பின்னர் குமாரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.