Skip to main content

"இந்த மாபெரும் தவறை திருத்துவதற்கு ஒரே வழிதான்" - கடன் தள்ளுபடி சர்ச்சைக்கு ப.சிதம்பரம் யோசனை...

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

 

chidambaram about writing off bad loans

 

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே அண்மையில் தாக்கல் செய்த மனு ஒன்றில், பிப்ரவரி 16- ஆம் தேதி வரை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்களின் பெயர் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். ரிசர்வ் வாங்கி இதற்கு அளித்த பதிலில் ரூ.68 ஆயிரம் கோடி கணக்கியல் ரீதியாகத் தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இதனை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இந்த கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனவும், கணக்கியல் ரீதியாக மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், "பொருளாதாரம் குறித்த நடவடிக்கைகள் குறித்து ராகுல் காந்திக்கு ஒன்றும் தெரியாது. அவர் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்திடம் ராகுல் காந்தி டியூஷன் கற்க வேண்டும்" என பிரகாஷ் ஜவடேகர் ராகுலை விமர்சித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், "ரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம்

இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா! இந்த மாபெரும் தவறை திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு.

ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்