அரசு வேலை வாங்கிக் கொடுக்க ஐபிஎல் வீரரிடம் பேரம் பேசப்பட்டதாக பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது அவர் பேசுகையில், "விளையாட்டு வீரர் ஜாஸ் இந்தர் சிங் ஐபிஎல் அணியின் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனால் அவர் பிளேயிங் 11 இல் இல்லை. பஞ்சாப் பவனில் ஜாஸ் இந்தர் சிங்கும் அவரது தந்தையும் அப்போதைய முதல்வர் சன்னியை சந்தித்தனர். அப்போது சரண்ஜித் சிங் சன்னி, அவர்களின் வேலை முடியும் என்றும் தனது மருமகன் ஜஷானை சந்திக்குமாறும் கூறியுள்ளார்.
இவ்வாறு கூறிய நிலையில் கிரிக்கெட் போட்டியை பார்க்கச் சென்றிருந்த போது கிரிக்கெட் வீரர் என்னை சந்தித்தார். அப்போது அரசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன் அந்த வேலையை வாங்கிக் கொடுப்பதற்கு ஜஷான் 2 கோடி ரூபாய் கேட்டதாக என்னிடம் கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சரண்ஜித் சிங் உரிய பதிலளிக்கவில்லை எனில் மேலும் பல ஆதாரங்களை வெளியிடுவேன். விளையாட்டுத்துறை மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் பேசி ஜாஸ் இந்தர் சிங்கின் அரசு பணிக்கான ஏற்பாடுகளை செய்வோம். மேலும் ஜாஸ் இந்தர் சிங்க்கு உரிய உரிமைகளை வழங்குவோம். இந்த சம்பவத்திற்கு சரண்ஜித் சிங் சன்னி மன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது அவருடன் ஐபிஎல் வீரர் ஜாஸ் இந்தர் சிங் மற்றும் அவரது தந்தை மஞ்சிந்தர் சிங் ஆகியோரை உடன் அழைத்து வந்திருந்தார். மேலும், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னியுடன் மஞ்சிந்தர் சிங் இருக்கும் படங்களையும் முதல்வர் காட்டினார்.