விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் அப்துல் கலாம் கேட்டுக்கொண்ட கனவு காணுங்கள் என்ற கூற்றும் தான் ஸ்ரீதன்யா சுரேஷை ஐ.ஏ.எஸ். ஆக்கியுள்ளது. இந்தியாவின் பழங்குடியினத்தை சோ்ந்த முதல் ஐ.ஏ.எஸ். என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ஸ்ரீதன்யா சுரேஷ் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பொழுதனா பஞ்சாயத்தில் துரியோடு கிராமத்தை சோ்ந்தவா். பழங்குடியினத்தில் "குறிச்சியா' இனத்தை சோ்ந்த தினக்கூலி தொழிலாளிகளான சுரேஷ்-கமலா தம்பதியினரின் மூத்தமகள் தான் ஸ்ரீதன்யா சுரேஷ்.
அடுக்கி வைக்கப்பட்ட மூடைகளில் அடி மூடையாக கருதபடும் தன்னுடைய இனத்தை கேரளாவில் உள்ள ஒவ்வொரு மலையாளிகளும் உச்சரிக்க வேண்டும். அதற்கு தான் சாதிக்க வேண்டும் என்று சிறுவயதிலே விதை போட்ட ஸ்ரீதன்யாவுக்கு அப்துல் கலாமின் ஊக்கம் நல்லதொரு ஆரோக்கியத்தை ஏற்படுத்தியது. முதலில் கல்வியில் சாதித்து தன்னுடைய லட்சியத்தை அடைய வேண்டும் என்று கருதிய அவர், பள்ளிபடிப்பை அங்குள்ள நிர்மலா அரசுபள்ளியில் தொடா்ந்தார். அதன்பிறகு மேல்நிலைப்பள்ளியை துரியோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்தார்.
அதன்பிறகு உயா்கல்வியை கோழிக்கோடு புனித ஜோசப் கல்லூரியில் விலங்கியல் துறையில் இளங்கலை பட்டமும், கோழிக்கோடு பல்கலைகழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். பின்னா் ஆதிதிராவிடா் நலத்துறையில் அரசு பணி கிடைத்தும் சில நாட்களிலே அந்த பணியை ராஜினமா செய்தார். இதற்கு காரணம் ஸ்ரீதன்யாவின் ஐஏஎஸ் கனவு தான். இந்த நிலையில் ஸ்ரீதன்யாவின் பெற்றோர்கள் அவள் எடுத்த படிப்பாக இருந்தாலும் சரி அரசு பணியை ராஜினமா செய்த போதிலும் அதற்கு ஆதரவாகவும் அவளின் லட்சியத்துக்கு உறுதுணையாகவும் இருந்தனா்.
இந்த நிலையில் தனது ஐஏஎஸ் கனவை நிறைவேற்றும் விதமாக சிவில் சா்வீஸ் தோ்வை எழுதி முதல் முயற்சிலே 2018-ல் வெற்றி பெற்று தேசிய அளவில் 410 ஆவது இடத்தை பிடித்தார். அவள் வெற்றி பெற்றதை தொடா்ந்து நாடு முமுவதும் ஸ்ரீதன்யாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. கேரளாவில் முதல்வா், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சி பிரமுகா்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டியுள்ளனர். ம.நீ.ம. தலைவா் கமலஹாசன் ஸ்ரீதன்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் டெல்லியில் பயிற்சி முடிந்து மே மாதம் கடைசியில் கேரளா வந்த ஸ்ரீதன்யா சுரேஷ் கரோனா நடைமுறையில் 14 நாட்கள் தனிமைபடுத்தபட்ட பின் கோழிக்கோடு உதவி ஆட்சியராக (சப்-கலெக்டா்) கேரள அரசு நியாமித்தது. இதையடுத்து ஸ்ரீதன்யா சுரேஷ் உதவி ஆட்சியராக பதவியேற்று கொண்டார். இதை தொடா்ந்து அதிகாரிகளும், அந்தபகுதி மக்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.