இந்தியாவில் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சில நாடுகள் 12 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதியளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
அதேநேரத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மீது தடுப்பூசி பரிசோதனை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, செப்டம்பர் - அக்டோபரில் 2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "குழந்தைகளுக்குப் பொதுவாக லேசான பாதிப்பே இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை நாம் உருவாக்க வேண்டும். ஏனெனில் இந்த தொற்றுநோயை நாம் கட்டுப்படுத்த வேண்டுமானால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சோதனைக்கு முன்வந்துள்ளதால், பாரத் பயோடெக் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் மிக வேகமாக சோதனைகளைச் செய்கின்றன. தடுப்பூசி சோதனை முன்கூட்டியே முடிவடையும். மூன்று மாதங்களில் முடிவடையாலாம். செப்டம்பர் மாதத்திற்குள் நம்மிடம் தரவு இருக்கும். அப்போதே தடுப்பூசிக்கு ஒப்புதலும் கிடைக்கும் என நம்பலாம். எனவே செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கு செலுத்தக்கூடிய தடுப்பூசிகளை நம் நாட்டிலிருந்தே பெறுவோம்" என கூறியுள்ளார்.