Skip to main content

வேளாண் விழா 2023; மகிழ்ச்சியில் பொதுமக்கள்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

puducherry vegetable flower and fruit exhibition 

 

புதுவை அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் வேளாண் விழா 2023 மற்றும் 33வது காய்கனி மற்றும் மலர் கண்காட்சி முதலியார்பேட்டை ஏ.எப்.டி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் பூக்களால் ஆன டால்பின், சிட்டுக்குருவி, மைனா, மயில், பென்குயின், சிங்கம் மற்றும் பூக்களாலான நீரூற்று, யானை மற்றும் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஆயி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரச் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 

பல்வேறு மாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்ட சுமார் 15,000 அலங்காரத்தழை மற்றும் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் 35,000 எண்ணிக்கையில் அடங்கிய சால்வியா, சாமந்தி, சினியா, பெட்டுனியா, டொரேன்னியா, காலண்டுலா, டையான்தஸ் மற்றும் தாலியா போன்ற மலர்ச்செடிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதே போன்று மூலிகை செடிகளான பேய் விரட்டி, திப்பிலி, சோற்றுக்கற்றாழை, யானை திப்பிலி, பின்னை, மருதாணி, காட்டு துளசி, திருநீற்றுப் பச்சிலை, குட்டி பலா, கருஊமத்தை, காட்டு வெற்றிலை, தவசி கீரை உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

 

திராட்சையால் உருவாக்கப்பட்ட காளை மாடுகள், தர்பூசணியில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி, பாரதியார், அப்துல் கலாம், அன்னை தெரசா, நரேந்திர மோடி மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை, அமைச்சர் சந்திர.பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் உருவங்களும் உருவாக்கப்பட்டிருந்தன. மேலும், அன்னாசி பழ முதலை, மாம்பழ மீன்கள், பூசணிக்காய் கத்தரிக்காய் மயில், பாகற்காய் டைனோசர் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும், காகிதத்தால் ஆன பொம்மைகள், பனை மட்டை மற்றும் தென்னை மட்டை, சுரக்குடுவையாலான கலை பொருட்கள் மற்றும் கைவினைப் பொருள்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. 

 

மேலும் சிறுதானியங்களால் உருவாக்கப்பட்ட ரங்கோலி கோலங்கள், உழவன் ஏர் ஓட்டுவது போன்ற படங்கள் மழைநீர் சேமிப்பு, பூமி பாதுகாப்பு, தலைவர்கள் சிலைகள், நடவு நடுவது ஆகியவற்றையும் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இதில் வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறையில் உள்ள புதிய வகை விதைகள், உரங்கள், பயிர் பாதுகாப்பு இரசாயனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், திட்டங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த மலர் கண்காட்சியை ஏராளமான பொதுமக்களும் வெளியூர் பார்வையாளர்களும் வந்து கண்டு ரசித்து தமக்கு பிடித்த மலர்ச்செடிகளை வாங்கிச் சென்றனர். மேலும், பார்வையாளர்கள் கண்காட்சியை ரசித்ததோடு குடும்பத்துடன் போட்டோ எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். நிறைவு விழாவில் அதிக பரிசுகள் பெறும் நபருக்கு ஆண்கள் பிரிவில் காய்கனி ராஜா என்ற பட்டமும், பெண்கள் பிரிவில் அதிக பரிசுகள் பெறும் பெண்களுக்கு மலர் ராணி மற்றும் காய்கறி ராணி போன்ற பட்டங்களும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்