புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது,
"புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. குணமடைந்து வருவோர் 53 சதவீதமாக உள்ளது. இறப்பு 1.4 சதவீதமாக உள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் ஏற்பாடுகள் சரியில்லை என்று பலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். உண்மைக்குத் தவறான பதிவுகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையை பொறுத்தவரை பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் கரோனா அதிகரித்து வருகிறது. ஊரடங்கினால் கரோனா நோய்த் தொற்று குறையும் என்பது ஒரு அம்சம்தான். மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடித்தால் தான் குறையும். மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். மக்கள் சரிவர கடைப்பிடிப்பதில்லை. தேநீர் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்க கூடாது. கும்பல் கூடுவது, வெளியில் தேவையில்லாமல் நின்று பேசுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். தேநீர் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
மேலும் மத்திய அரசு கரோனா தடுப்பிற்காக "கோவாக்சின்" என்ற மருந்தைக் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். இந்திய மருத்துவக் கழகம் தற்போது மனிதர்களுக்குக் கொடுத்து பரிசோதிக்க உள்ளது. ஆனால் பல மருத்துவ வல்லுநர்களின் கருத்து 9 மாதங்களுக்கு பரிசோதனை செய்தபிறகே பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியும் என்கின்றார்கள். மத்திய அரசு அது முழுமையான தீர்வு என்றால் மட்டுமே அதனைக் கொண்டு வர வேண்டும்.
புதுச்சேரி மாநில நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு இன்னும் ஓரிரு நாளில் அனுமதி அளிக்க உள்ளது. அதனால் அரசு அதற்கான ஆயத்த வேளைகளில் உள்ளது. துணை நிலை ஆளுநரிடம் அனுப்பி பல கேள்விகளைக் கேட்டு திருப்பி அனுப்பினார். புதுச்சேரி அமைச்சரவையால் காலதாமதம் இல்லை. விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
பாரத பிரதமர் மோடிக்கு நிலுவையில் உள்ள GST நிதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் கடிதம் எழுதி இருந்தேன். இதுவரை பதில் இல்லை. பட்ஜெட்டிற்கு பின்பு நிதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு நாராயணசாமி அதில் கூறியுள்ளார்.