திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரம் கொண்ட தலைவரும், மம்தா பானர்ஜியின் மைத்துனருமான அபிஷேக் பானர்ஜியால் அக்கட்சிக்குள் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அக்கட்சியில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கொள்கையை அறிமுகப்படுத்த பிரசாந்த் கிஷோருடன் இணைந்து அபிஷேக் பானர்ஜி முயன்று வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. மம்தா பானர்ஜிக்கு இந்தக் கொள்கையில் உடன்பாடு இல்லை என்பதால், இருவருக்கும் அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சியின் பல இளம் தலைவர்கள் அபிஷேக் பானர்ஜி பக்கம் நின்றாலும், மூத்த தலைவர்கள் பலர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக இருக்கின்றனர். இது மேற்குவங்க அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி கட்சிக்குள்ளேயே இரு அணிகளாகத் தலைவர்கள் பிரிந்ததால், கட்சி பலவீனப்பட்டுவிடும் என அஞ்சிய மம்தா, கட்சியின் மூத்த தலைவர்களுடனான அவசர கூட்டத்தை நேற்று மாலை கூட்டினார்.
இக்கூட்டத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய கட்சி நிர்வாகிகள் குழுவை கலைத்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் தேசிய பொதுச்செயலாளராக இருந்த அபிஷேக் பானர்ஜி தனது பதவியை இழந்துள்ளார். இதுமட்டுமல்லாமல், புதிதாக 20 பேர் கொண்ட செயற்குழு ஒன்றையும் மம்தா அறிவித்துள்ளார். அபிஷேக் பானர்ஜியின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு செயற்குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
மம்தாவின் இந்த நடவடிக்கையால் அபிஷேக் பானர்ஜியின் ஆதரவாளர்கள் பலர் பதவிகளை இழந்துள்ள நிலையில், இவ்விவகாரம் கட்சிக்குள் மீண்டும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனக் கருத்து எழுந்துள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவையை அம்மாநில ஆளுநர் முடக்கியது, மம்தா தனது கட்சியின் நிர்வாகிகள் குழுவைக் கலைத்தது என ஐந்து மாநில தேர்தல்களுக்கு மத்தியில் அடுத்தடுத்த பரபரப்புகளைச் சந்தித்துவருகிறது மேற்குவங்கம்.