புதுச்சேரி வரலாற்றினை தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; ‘புதுச்சேரி யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றாலும் தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டு கூறுகள் அனைத்தும் தன்னகத்தே கொண்டதாக விளங்குகிறது. கல்வியில் தமிழகத்தின் பாடத்திட்டத்தையே புதுச்சேரி பின்பற்றி வருகிறது. எனவே தமிழ்நாடு பாடத்திட்டத்தில் புதுச்சேரி வரலாற்றை சேர்க்க வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் நீண்டநாள் கனவாக இருந்து வருகிறது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் புதுச்சேரியின் வரலாற்றையும் சேர்ப்பது புதுச்சேரியின் வரலாற்றை புதுச்சேரி மற்றும் தமிழக தமிழ் மாணவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். எனவே தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் புதுச்சேரி வரலாற்றை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்கான பாடத் திட்டங்களை தயாரிக்கவும், அதற்கான நூல்களை எழுதவும் தேவையான கல்வியாளர்களை புதுச்சேரி அரசின் கல்வித்துறை பரிந்துரை செய்யும்" என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.