பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் சிக்கி 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பதில்த்தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்நூரில் உள்ள கேரி பட்டால் பகுதியில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் வீட்டுக்கு வெளியில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை துப்பாக்கி குண்டு பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்தத் தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
தாக்குதலில் உயிரிழந்த குழந்தையின் தந்தை கூறுகையில், என் குழந்தை திடீரென அழத்தொடங்கினான். அவனது உடைகள் முழுவதும் ரத்தத்தால் நனைந்திருந்தது. அவனைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்த அடுத்த நிமிடமே அவனது உயிர் பிரிந்துவிட்டது. ஒரு 8 மாத குழந்தையின் மீது பாகிஸ்தான் ராணுவத்திற்கு என்ன வன்மம் இருந்துவிட முடியும்? என உடைந்த குரலில் கேள்வியெழுப்பியுள்ளார்.