புதுச்சேரி சட்டசபையில் 2019-20 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் சட்டசபை கூடியபோது பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கான செலவினங்களுக்கு மட்டுமே சட்டசபையின் ஒப்புதல் பெறப்பட்டது. அதையடுத்து பட்ஜெட் தயாரிப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
பல்வேறு அமைப்பினரை அழைத்து அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பட்ஜெட் தொகையை இறுதி செய்வதற்காக மாநில திட்டக் குழு, கடந்த 13-ஆம் தேதி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் கூடியது. அந்த கூட்டத்தில் 8,425 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த 18-ஆம் தேதி பட்ஜெட் தொகை விபரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அமைச்சரவையிலும் பட்ஜெட்டுக்கு இறுதிவடிவம் தரப்பட்டு, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இடைக்கால பட்ஜெட் ஆகஸ்ட் மாதத்தோடு முடியும் நிலையில் இம்மாத இறுதிக்குள் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் தாக்கல் செய்து துறைவாரியாக விவாதம் நடத்தி, நிதி ஒதுக்கீட்டுக்கு சட்டசபையின் ஒப்புதலை பெற வேண்டும். அப்போதுதான் அரசின் செலவினங்களுக்கு பணம் செலவிட முடியும். இந்நிலையில் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வராததால் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவது தாமதமாகி வருகிறது. சில நாட்களில் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒப்புதல் கிடைத்து விட்டால் அடுத்தடுத்த வாரங்களில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். அதற்கான ஏற்பாடுகளில் சட்டசபை செயலகம் தயார் நிலையில் உள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறைவான நாட்களே நடக்கும் என தெரிகிறது. மேலும் அடுத்த வாரத்தில் பக்ரீத் பண்டிகை, சுதந்திர தினம் என இரண்டு நாட்கள் விடுமுறை, அத்துடன் வீராம்பட்டினம் தேர்த் திருவிழா காரணமாக வெள்ளிக் கிழமையன்று உள்ளூர் விடுமுறை என அடுத்த வாரத்தின் பணி நாட்களில் 3 நாட்கள் விடுமுறை நாள் வருவதால். அதற்கு அடுத்த வாரம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி தொடங்கினாலும் 12 வேலை நாட்களே உள்ளன. அதற்குள் ஆளுநர் உரை, உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பட்ஜெட் தாக்கல், பட்ஜெட் மீதான விவாதம், துறைவாரியான மான்யக் கோரிக்கைகள் மீதான விவாதம், கேள்வி நேரம், ஜீரோ நேரம், கவன ஈர்ப்பு, கூட்டத் தொடரின் நிறைவு நாளில் அரசு தீர்மானம் உள்ளிட்ட அலுவல்களை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்பு.