இ- பாஸ் முறையை ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் அனைத்து மாநில அரசுகளும் இ-பாஸ் முறையைப் பின்பற்றி வந்தன. கடந்த நான்கு மாதங்களாக பின்பற்றப்பட்டு வந்த இ- பாஸ் முறையை, கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ரத்து செய்தது. இருப்பினும் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால், இந்த மாநிலங்கள் இ-பாஸ் முறையைத் தொடர்ந்து பின்பற்றி வந்தன.
இந்த நிலையில் நேற்று (22/08/2020) மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், "மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ-பாஸ் தேவையில்லை. மேலும், மாநில அரசின் கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது" என குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் இ- பாஸ் முறையை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு இ- பாஸ் பெறும் https://epass.py.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், 'இன்று முதல் புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லவும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இ- பாஸ் தேவையில்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது.