புதுச்சேரி அரசு சார்பில் சிகப்பு அட்டைதாரர்களுக்கு 30 கிலோ இலவச அரிசி மற்றும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பல மாதங்களாக ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரிசி வழங்கும் பணியும் நிறுத்தப்பட்டு பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளதால் ரேஷன் அரிசி பொதுமக்களுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் இருந்து 12 டன் ரேஷன் அரிசி ஓசூருக்கு கடத்தப்பட உள்ளதாக புதுச்சேரி சிறப்பு அதிரடி பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அதிரடிப்படை போலீசார் வில்லியனூர் அடுத்த ஊசுட்டேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ‘கல்வித் துறைக்கு சொந்தமான அரசி தடை செய்யாதீர்...' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு லாரி மற்றும் ஒரு மினி லாரி வேகமாக வந்தது. லாரியை மடக்கி பிடித்த போலீசார், சோதனை செய்தனர். அதில் 12 டன் ரேஷன் அரிசி ஓசூருக்கு கடத்தப்பட இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து லாரி ஓட்டுனர்கள் மற்றும் லாரியில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்த அதிரடி பிரிவு போலீசார் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து வில்லியனூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் சோலை நகரிலிருந்து ஓசூருக்கு அரிசி கடத்தியது எப்படி? யார் கடத்த சொன்னது? என்பது குறித்து அவர்களிடம் வில்லியனூர் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வித் துறைக்கு சொந்தமான அரிசி என்ற ஸ்டிக்கர் ஒட்டி ஓசூருக்கு 12 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.