
புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்று காலமானார்.
புதுவை மாநிலத்தில் முக்கிய அரசியல் தலைவராக திகழ்ந்தவர் ப.கண்ணன் (74). இவர் பேரவைத் தலைவர், அமைச்சர், மாநிலங்களவை எம்.பி என பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார். இதையடுத்து, அதிமுக -பா.ஜ.க கூட்டணியில் இணைந்து செயல்பட்ட இவர் கடந்த 2021ஆம் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகினார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் ரத்த அழுத்த குறைவு மற்றும் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். . அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (05-11-23) இரவு காலமானார். முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மறைவை அடுத்து முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.