துணைநிலை ஆளுநர் கூறும் கருத்துகளை தெலுங்கானா மாநிலத்திலேயே யாரும் கேட்கமாட்டார்கள் என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி தமிழிசை செளந்தரராஜனை விமர்சித்து பேட்டி அளித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி. நேற்று (17-08-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் மீதான வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் 100 முறை பெண்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசுகிறார்.
ஆனால், அவர் மணிப்பூர் பழங்குடி மக்களுக்கான பாதுகாப்பு குறித்து எந்தவிதமான உத்தரவும் தரவில்லை. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பழங்குடி இனத்தவராக இருந்தாலும் அவருக்குக்கூட உண்மை நிலை தெரியாமல் இருப்பது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தொடர்ந்து கருத்துகள் கூறி வருகிறார். ஆனால், அவர் கூறும் கருத்துகளை தமிழகம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள யாரும் கேட்பதில்லை. புதுச்சேரியிலும் கூட அவர் பேச்சை யாரும் கேட்பதில்லை.
ஏனென்றால், அவர் கூறுவதல்லாம் மக்களுக்கு எதிரான கருத்துகள். அவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பிரதமர், அமித்ஷாவின் ஆதரவைப் பெற்று தேர்தலில் நிற்க வேண்டும் என்பதே துணைநிலை ஆளுநரின் கொள்கையாக இருக்கிறது. புதுவை மாநில மக்கள் நலனில் தமிழிசை செளந்தரராஜனுக்கு அக்கறை இல்லை” என்று கூறினார்.