குரூப் 'பி' பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்றைய கேள்வி நேரம் முடிவடைந்தவுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசும்போது, குரூப் 'பி' பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும், முதலமைச்சர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளார் என்றும் கூறினார்.
பின்னர் இது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "குரூப் 'பி' பணியிடங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உட்பட அனைத்து உட்பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதியானவர்கள். திறமை, தகுதி அடிப்படையில் தேர்வு செய்துள்ளோம். சி.பி.எஸ்.இ கூறும் தகுதிகள் அரசு பள்ளிகளில் உள்ளது. இதனால் தகுதியான கல்வி கிடைக்கும்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை தீவிரமாகச் செயல்படும். இம்மாத இறுதிக்குள் நோய் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை தொடர்ந்து வலியுறுத்துவோம். கஞ்சா விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா விற்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். இதற்காக தனிப்பிரிவு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.