புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர்கள் மாநாடு நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டார்.
மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "50,000 மக்கள் தொகை கொண்ட பகுதியில் தான் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். ஆனால், பத்தாயிரம் மக்கள் தொகை உள்ள இடத்தில் புதுச்சேரியில் சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மருத்துவம் படிக்கும் மாணவர்களும் கிராமப்புறத்தில் பணி செய்ய வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் நமது அரசின் எண்ணம். உலகத்தரம் வாய்ந்த அரசு மருத்துவமனைகளை புதுச்சேரியில் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது" என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள், கதிர்காமம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி.ரமேஷ் மற்றும் மருத்துவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.