புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (10/05/2020) செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்கள் இரண்டு பேர் தற்போது புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காரைக்காலைச் சார்ந்த ஒருவர் காவல்துறையினர் சார்பில் கைது செய்யப்பட்டார். அவரை சோதனை செய்தபோது அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்குப் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றார்கள். அவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்தபடுவார்கள். வெளிநாட்டிலிருந்து 2,700 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றார்கள். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கரோனா தொற்றுவால் சிகிச்சை பெறுபவர்கள் தெருவைத் தவிர்த்து மற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டுளது.
புதுச்சேரியிலிருந்து மதுவை வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் கலால்வரியை கட்டிவிட்டுதான் வாங்கிச் செல்கின்றனர். தவறு யார் செய்தாலும் அதனைத் தட்டி கேட்போம். புகார் கொடுத்த மதுக்கடை உரிமையாளர் மீதே வழக்கு போடுவது தவறு. இது காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம். துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காவல்துறை அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு இட்டு, வழக்குப் பதிவு செய்து வருகின்றார். இதனால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் உரிமத்தை, ஆதாரமற்ற குற்றசாட்டை வைத்து பறிப்பது அதிகார துஷபிரயோகம். தேவையில்லாமல் மதுக் கடைகள் உரிமத்தை ரத்து செய்தது குறித்து தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்.
மத்திய அரசானது மின்சாரம் குறித்து ஒரு உத்தரவை கொண்டு வருகின்றார்கள். இங்கு மின்சாரம் விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கிறோம். மத்திய அரசின் உத்தரவு இதனைத் தடுக்கும் வகையில் உள்ளது. இதனை முழுமையாக எதிர்க்கிறோம் என்றும் இதுகுறித்து பிரதமருக்குக் கடிதம் எழுத உள்ளேன்" என்றும் தெரிவித்தார்.