தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 119 ஆகும். அதில் ஒருவர் நியமன உறுப்பினர் ஆவர். இந்த மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சுமார் 88 தொகுதிகளை கைப்பற்றியது. அதே போல் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் கட்சி ஏழு தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக தெலங்கானா மாநில முதல்வராக சந்திரசேகரராவ் பதவியேற்றார். தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 18 ஆக குறைந்தது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கிடையே அதிருப்தி ஏற்பட்டு, 12 காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியை சந்தித்து தாங்கள் ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைய உள்ளதாகவும், சட்டப்பேரவையில் எங்களை ராஷ்டிரிய சமிதி கட்சியில் 12 எம்எல்ஏக்கள் இணைந்து விட்டதாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் முடிவால் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியும், நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 6 ஆக உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகரில் மிகவும் செல்வாக்கு மிக்க கட்சியாக ஏஐஎம்ஐஎம் உள்ளது. இந்த கட்சிக்கு தற்போது 7 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் தெலங்கானா மாநில எதிர்கட்சி அந்தஸ்தை சபாநாயகர் எங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஒவைசி, எங்கள் கட்சியை விட காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குறைவாக உள்ளதால் சபாநாயகர் எங்களுக்கு அதிகாரப்பூர்வ எதிர்கட்சி அந்தஸ்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அம்மாநில சட்டமன்றம் கூடும் போது இது குறித்து ஆலோசனை செய்து சபாநாயகர் இந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க அதிக வாய்ப்பு உள்ளது.