Skip to main content

மத்திய அரசு, ஊரடங்கு முடிவை மாநில அரசிடம் விட்டுவிட வேண்டும் -  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!  

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
 Puducherry Chief Minister Narayanasamy


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவை வளாகத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர், “புதுச்சேரியில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அண்டை மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் முனைப்போடு செயல்பட்டு வருகின்றார்கள். அருகில் உள்ள மாநிலத்தில் இருந்து ரத்தம் சுத்திகரிப்பு, நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு வருகின்றார்கள். அவர்கள் உரிய மருத்துவ சான்றிதழுடன் வந்தால் அனுமதிக்க முடிவெடுத்துள்ளோம்.

 

 


இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மாணவ, மாணவிகள் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஒரு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைகழகத்தில் படிப்பவர்கள் தங்களது மாநிலங்களுக்கு செல்ல கோரிக்கை வைத்துள்ளார்கள். வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது மாநிலங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கான அனைத்து செலவுகளும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உள்ளோம்.

 


இன்று காணொளி மூலம் அகில இந்திய காங்கிரஸ் கூட்டம்  நடைபெற்றது.  கரோனா நோய் தொற்றை தடுக்க அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும், மத்திய அரசு உதவிகள் குறித்தும் பேசப்பட்டது. தொழிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். மே 17-க்கு பிறகு ஊரடங்கு அதிகரித்தால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும். மத்திய அரசு இந்த சூழ்நிலையில் உதவ முன்வரவேண்டும். மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு சிவப்பு, ஆரஞ்சு மண்டலம் என்று அறிவித்துள்ளது. மாநில அரசு இதற்கு முடிவெடுக்க வேண்டும். ஒரு சில இடங்களில் 30 நாட்களுக்கு தனிமை படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு தொற்று இருந்தால் அந்த தெருவை மட்டும் தனிமை படுத்த வேண்டும். மத்திய அரசு மண்டலங்களை அறிவிக்கும் போதும் மாநிலங்களை கலந்துகொண்டு அறிவிக்க வேண்டும். இதனை மாநிலத்தின் கையில் விட்டுவிட வேண்டும். ஊரடங்கு குறித்தான முடிவையும் மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும் என்றார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்