நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே 1 நாடாளுமன்றத் தொகுதி மட்டுமே உள்ள புதுச்சேரி மாநிலத்தில் யார் போட்டியிடுவது என்பது குறித்து புதுவை முதல்வர் ரங்கசாமி இல்லத்தில் ஆலோசனை நடைபெற்று வந்தது. புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க. மற்றும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனையில் முதல்வர் ரங்கசாமியுடன் பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், செல்வ கணபதி எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில், புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பா.ஜ.க நிர்வாகிகள், முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர். அவர்கள் வைத்த கோரிக்கையை முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், புதுச்சேரி மக்களுக்கு நன்கு அறிமுகமான நபரை வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க.வுக்கு ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.