புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, "இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது, துரோகம் இல்லையா? மத்திய அரசு மக்களுக்கு செய்யும் துரோகத்தை ஆதரித்தால் அது எதிர்க்கட்சிகளைப் பாதிக்கும். கலைஞர் பெயரில் சிற்றுண்டி திட்டத்தைத் தொடங்கினேன்; அதை மத்திய அரசுக் காப்பி அடித்தது. இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார் மோடி, ஆறு ஆண்டுகளாகியும் வேலை தந்தாரா? பண மதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டார்கள், கறுப்பு பணம் வெளியே வந்ததா? ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்திவிட்டார்களா? புயல், வெள்ளப் பாதிப்பின்போது எதிர்க்கட்சியினர் யாரையும் காணவில்லை. நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை வைத்திருந்தால் எதை வேண்டுமென்றாலும் செய்யலாமா? பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை உயர்த்தியதே மத்திய அரசின் சாதனை. சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறையைக் கொண்டு ரெய்டு நடத்தியதால் சிலர் ஓடிப்போனார்கள். துணைநிலை ஆளுநருக்குத் தனிப்பட்ட எந்த அதிகாரமும் கிடையாது. புதுச்சேரி அரசு நிறைவேற்றிய தீர்மானங்களுக்குத் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் தரவில்லை" எனக் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, மத்திய அரசைக் குற்றம்சாட்டி பேசிய முதல்வர் நாராயணசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அவரின் பேச்சை நிறுத்தக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.