அயோத்தி நில வழக்கில் இராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு அனுமதியளித்தது. மேலும், இராமர் கோயில் கட்ட அறக்கட்டளை ஏற்படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மத்திய அரசு ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்தது.
ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையே கோயில் நிதி விவகாரங்களைக் கவனித்துவருகிறது. அயோத்தி இராமர் கோயில் கட்ட மக்களிடம் வசூலிக்கப்படும் பணத்தையும் இந்த அறக்கட்டளையே நிர்வகித்துவருகிறது. இந்தநிலையயில், சமாஜ்வாடி கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளன.
இரண்டு ரியல் எஸ்டேட் வியாபாரிகள், ஒரு நபரிடமிருந்து 2 கோடிக்கு நிலம் வாங்கியதாகவும், சில நிமிடங்களில் அதே நிலத்தை ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை 18 கோடிக்கு வாங்கியதாகவும் சமாஜ்வாடி கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் கூறியுள்ளன. சமாஜ்வாடி கட்சி, இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைச் செயலாளர் சம்பத் ராய், நிலத்தை முதலில் வாங்கியவர்கள், சில வருடங்களுக்கு முன்பே நிலத்தின் உரிமையாளரோடு அப்போதைய விலையில் நிலத்தை வாங்க ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், மார்ச் மாதம் தற்போதைய விலையில் கோயில் அறக்கட்டளைக்கு நிலத்தை விற்பதற்கான நடைமுறைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிலம் வாங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நம்பிக்கையினாலும், பக்தியினாலும் கடவுளின் காலடியில் தங்கள் நன்கொடைகளை அளித்தார்கள். அந்த நன்கொடைகளைத் தவறாகப் பயன்படுத்துவது அநீதியானது. இது ஒரு பாவம். மேலும் இது பக்தர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகும்" என கூறியுள்ளார்.