உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகள் மீது கார்கள் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போது, நடந்த வன்முறையில் பாஜகவினர் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுக்குத் தொடர்பு இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள், அம்மாநில துணை முதலமைச்சருக்கு கருப்பு கொடி காட்ட லக்கிம்பூர் கேரியில் குவிந்தனர். அப்போது, துணை முதலமைச்சரை வரவேற்க சென்ற பாஜகவினரின் கார்கள் திடீரென கூட்டத்திற்குள் புகுந்ததில், நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் கார்களுக்குத் தீ வைத்தனர்.
மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா காரில் இருந்ததாகவும், அவரது தூண்டுதல் காரணமாகவே விவசாயிகள் மீது கார்கள் மோதியதாகவும் விவசாய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இறந்த நான்கு விவசாயிகளில் ஒருவர் ஆஷிஷ் துப்பாக்கியால் சுட்டதால் உயிரிழந்ததாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (04/10/2021) அதிகாலை லக்னோவில் இருந்து சாலை மார்க்கமாக பன்வீர்பூர் கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கிராம எல்லையிலேயே அவரை காவல்துறையினர் தடுத்து, கைது செய்தனர். இதனால் காவல்துறையினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகவலை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. சீனிவாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாதல், பஞ்சாப் மாநில துணை முதலமைச்சர் சுகிந்தர் ரன்தவா ஆகியோர் லக்னோ விமான நிலையம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, வன்முறை மேலும் பரவாமல் இருக்க லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.