









நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று (08/12/2021) பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று (09/12/2021) சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் 13 பேரின் உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு டெல்லி பாலம் விமானத்தில் வைக்கப்பட்டிருந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதைச் செலுத்தினார். அத்துடன் முப்படை தலைமை தளபதியின் மகள்கள், உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார்.
அதேபோல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோரும் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மரியாதைச் செலுத்தினர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.