சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் புதுவையில் எவர் வேண்டுமானாலும் வந்து தங்கலாம்- நாராயணசாமி

புதுவை முதல்வர் நாராயணசாமி சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அங்போது அவரிடம், "புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வந்துள்ள தங்கியுள்ளனரே.... எனக் கேட்டபோது, முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:
காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சிகளாக உள்ளன. இங்கு கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறோம். கடந்த தேர்தலின் போது அதிமுக எங்களை எதிர்த்து போட்டியிட்டது. அதிமுகவிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
புதுச்சேரி சுற்றுலா நகரம் இங்கு யார் வேண்டுமானாலும் இங்கு வந்து தங்கலாம். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. அதிமுகவின் எந்த அணிகளையும் காங்கிரஸ் ஆதரிக்காது. எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்ட தரப்பைச் சேர்ந்தவர்கள் எவர் வேண்டுமானாலும் வரலாம். சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தங்கலாம். சில புகார்கள் வந்ததின் அடிப்படையில் தனியார் விடுதியில் சீனியர் எஸ்.பி. சென்று ஆய்வு செய்தார்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். சட்டம் ஒழுங்கு மீறினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் அரசியல் சட்டத்தை மீறி காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. இதற்கான விளைவை சந்திக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி கேட்டபோது, முதல்வர் நாராயணசாமி, " இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், கருத்து எதுவும் கூறமுடியாது" என்றார். புதுவையில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்த வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளாரே.... எனக் கேட்டபோது, பதில் எதுவும் கூறாமல் முதல்வர் மெளனமாக சென்று விட்டார்.
- சுந்தரபாண்டியன்