நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கொண்டாட அவரது மகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் மாபெரும் சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் நாளை(23.1.2023) நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி கொல்கத்தாவில் சுபாஷ் சந்திரபோஸுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாளை பெரியளவில் விழா ஒன்றை நடத்தவுள்ளது. இவ்விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த விழாவிற்கு, ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸ் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஆங்கில செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “என்னுடைய தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மதங்களை மதித்தவர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அதற்கு நேரெதிரானது. சுபாஷ் சந்திரபோஸ் ஒரு இடதுசாரி., ஆனால் அவர்கள்(ஆர்.எஸ்.எஸ்) வலதுசாரி. சுபாஷ் சந்திரபோஸின் சித்தாந்தங்கள் என்று ஒப்பிட்டு பார்த்தால் இந்தியாவில் உள்ள வேறு எந்த கட்சியையும் விட காங்கிரஸ் கட்சிக்குத்தான் நிறைய ஒற்றுமையுள்ளது” எனக் கூறியிருக்கிறார்.