குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர்.
குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லியில் இன்றும் ஒருசில பகுதிகளில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்தால் நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்தும், அதனால் நடக்கும் வன்முறை குறித்தும் மனு ஒன்றை அளித்துள்ளன எதிர்க்கட்சிகள். காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக மனுவை குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ளனர்.