நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க மறுத்ததைத் தொடர்ந்து, தண்டனை விவரங்கள் அறிவிப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதித் துறை மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை விமர்சித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்தக் கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் கூறி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த விசாரணையின் முடிவில், பிரசாந்த் பூஷனை குற்றவாளி எனக் கடந்த 20 ஆம் தேதி அறிவித்த நீதிமன்றம், இது தொடர்பாக, அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது.
அவர் மன்னிப்புக் கேட்க மறுத்ததை அடுத்து, இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவருக்கு அரை மணி நேரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், மீண்டும் விசாரணை தொடங்கியபோதும், தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாகக் கூறினார். இதனையடுத்து இந்த வழக்கின் தண்டனை விவரங்களை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.