
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார். மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தி தனது உரையைத் தொடங்கிய பிரதமர், ''கரோனாவுக்கு பிறகு உலகில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கரோனாவுக்கு பிந்தைய சூழலில் உலகின் தலைமை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவேண்டும். அரசு திட்டங்களின் மூலம் ஏழைகள் வீடுகட்டி லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர். ஏழைத்தாய்கள் சமையல் எரிவாயு திட்டம் மூலம் பயனடையும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏழைகளின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக சென்று சேர்கிறது. ஆனால் பலர் இன்னும் 2014 ஆம் ஆண்டு நினைவிலேயே பின்தங்கி இருக்கின்றனர்'' என மறைமுகமாக காங்கிரசை விமர்சனம் செய்தார்.
அண்மையில் மக்களவையில் ராகுல்காந்தி ஆவேசமாகப் பேசிய பொழுது, 'தமிழக மக்களை வாழ்நாளில் ஒருபோதும் பாஜக ஆள முடியாது' எனப் பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதமர் மோடி, ''1962ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரமுடியவில்லை. பல மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சியில் அனுமதிக்க மக்கள் விரும்பவே இல்லை. பல இடங்களில் ஆட்சி கைவிட்டுப் போன பிறகும் காங்கிரஸ் கட்சியின் அகங்காரம் குறையவில்லை'' என்றார்.